முஸ்லிம் விவாக, காதி நீதிபதி பதவிக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பம் கோரல் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

முஸ்லிம் விவாக, காதி நீதிபதி பதவிக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாக காணப்படும் முஸ்லிம் விவாக, காதி நீதிபதி பதவிக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு சிரேஷ்ட உதவிச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை, நிந்தவூர்ப்பற்று, பொத்துவில், திருகோணமலை, கிண்ணியா, மூதூர், ஏறாவூர், ஒட்டமாவடி, புல்மோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஒருவராக இருத்தல் வேண்டும். அல்லது முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றுள்ள மௌலவி அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல்-ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும். 

சட்டத்தரணி ஒருவராக அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகைமையுடைய ஒருவராகவும் அல்லது ஓய்வுபெற்ற பதவி நிலை தரத்திலான அரச உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் மற்றும் விசேடமாக இஸ்லாமியச் சட்டம் பற்றிய நல்ல அறிவுடையவராகவும். விவாகமானவராகவும் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பபடிவத்தினை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர், சிரேஷ்ட, உதவிச் செயலாளர், காதிப் பிரிவு, நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகம் த.பெ. இல-573, கொழும்பு-12 எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad