(எம்.மனோசித்ரா)
தேவையேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை விமானப் படைக்கு ஒத்துழைப்பை வழங்க இந்திய விமானப் படை எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிதகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் விமானப் படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிடம் விமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திராமார்க் - 2 ராடார் கட்டமைப்பு தொகுதி நேற்று முன்தினம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டன. இதன்போதே உயர் ஸ்தானிகர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை விமானப் படைக்கு இந்திய விமானப் படையால் விமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ராடார் தொகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்திய விமானப் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய விமானப் படையின் பங்களிப்பிற்கமைய இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது இந்திய உயர் ஸ்தானிகர் கூறுகையில், இலங்கை விமானப் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவற்றுக்கிடையிலான நட்புறவு நீண்ட காலங்களாக தொடர்புடையவையாகும். தேவையேற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை விமானப் படைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
இந்த ஒத்துழைப்பிற்கு இந்தியாவிற்கும் இந்திய விமானப் படைக்கும், இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை விமானப் படையின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விமானப் படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரண இந்திய உயர்ஸ்தானிகரிடம் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment