காணாமற்போனோரின் பெயர்கள் உள்ளடக்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யவும் - பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ள ஆணையாளர்களின் பதவிக் காலம் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

காணாமற்போனோரின் பெயர்கள் உள்ளடக்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யவும் - பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ள ஆணையாளர்களின் பதவிக் காலம்

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் ஆணையாளர்களின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ளது.

இந்த அலுவலகத்தில் ஏழு ஆணையாளர்கள் உள்ளனர். இதன் தலைவராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகியதுடன், புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏனைய ஆறு ஆணையாளர்களினதும் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ளது. இவர்களது பதவிக் காலம் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்படுமா, இல்லையா என்பது கேள்விக்குறி.

இந்நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் கொழும்பில் இயங்குவதுடன், ஏனைய நான்கு பிராந்திய அலுவலகங்களும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் செயற்படுகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் இந்த அலுவலகங்களுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகளை ஏற்கும் செயற்பாடுகள், காணாமல் போனவர்களின் வரவின்மைக்கான சான்றிதழ் வழங்கல், மன்னார் புதைகுழி விவகாரங்கள் போன்ற விடயங்களை அலுவலகம் கடந்த மூன்று வடங்களில் நிறைவேற்றியுள்ளன. எனினும், அலுவலகம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்கவில்லை.

கடந்த ஆட்சிக் காலத்தில் அரச கரும மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இருந்த இந்த அலுவலகம் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பெயர்ப் பட்டியலை இந்த அலுவலகம் அண்மையில் வௌியிட்டது.

அதில் காணாமல் போன உறவினர்களின் பெயர்கள் இல்லாவிட்டால் அது தொடர்பில் தலைமை அலுவலகத்தில் அல்லது பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில், அலுவலகத்தின் 6 உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad