கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க அரசாங்கம் தீர்மானம், சர்வதேச கடன்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர் - அஷோக அபேசிங்க - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க அரசாங்கம் தீர்மானம், சர்வதேச கடன்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர் - அஷோக அபேசிங்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு துறைமுகத்தை சர்வதேச நாடுகளுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டோம் என பாராளுமன்றத்தில் பிரதமர் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு கொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

அதேபோல் சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அரசாங்கம் கூறிக்கொண்டு இந்தியா, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தை ஒருபோதும் விற்கவும் மாட்டோம், குத்தகைக்கு கொடுக்கவும் மாட்டோம் என பிரதமர் நேற்று சபையில் தெரிவித்தார், ஆனால் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு கொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது, இன்றும் (நேற்றும்) அது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.

இது இலங்கை ரூபாவில் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய்களாகும். ஆகவே இந்த விடயத்தில் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் மிகப்பெரிய பொய் ஒன்றினை கூறி பிரதமர் அனைவரையும் ஏமாற்றிவிட்டார். இன்று அமைச்சர்கள் அனைவரையும் கூப்பிட்டு இதற்கான இணக்கத்தை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.

கடன்களை பெற்றுக் கொள்ள மாட்டோம், முதலீடுகளை மட்டுமே நாம் பெற்றுக் கொள்வோம் என அரசாங்கம் கூறினாலும் சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனும், இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களும், கொரியாவிடம் இருந்து 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

ஆகவே இந்த மூன்று நாடுகளிடமும் இருந்து 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெற்றுக் கொள்ள தீர்மானம் எடுத்துள்ளது. இவ்வாறான கடன்களின் மூலமாக நாடு மேலும் நெருக்கடிக்குள் விழப்போகிறது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad