கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது - மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறும் : அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது - மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறும் : அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் அமோக வெற்றி பெறும். கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கும் விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக மட்டத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

வியாபார நடவடிக்கைகளுக்காக கிழக்கு முனையத்தை அயல் நாடான இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

கிழக்கு முனையத்தை கொண்டு எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுககப்பட்டன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியில் மாத்திரம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்த முடியும் என்ற சட்ட சிக்கல் நிலை காணப்படுகிறது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஒரு தீர்வு விரைவில் எடுக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட்டாலும் பொதுஜன பெரமுன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பங்காளி கட்சிகளின் ஆதரவுடனும் வெற்றி பெறுவோம் என்றார்.

No comments:

Post a Comment