முகப்புத்தகத்தில் வெறுப்பு உணர்வை தூண்டிய குற்றச்சாட்டில் கைதான நபரை 90 நாட்கள் சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

முகப்புத்தகத்தில் வெறுப்பு உணர்வை தூண்டிய குற்றச்சாட்டில் கைதான நபரை 90 நாட்கள் சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

(எம்.எப்.எம்.பஸீர்)

இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப்புத்தகம் ஊடாக வெளியிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த பசால் மொஹம்மட் நிசாரை, உடனடியாக சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலின் கீழ் கொண்டுவந்து, தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கொன்றில் இருந்த சந்தேகிக்கத்தக்கதான பெருமளவு பண பரிமாற்றலை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் சந்தேக நபரின் கணினி பாகங்களை சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு ஆராய்ந்த போது, அதிலிருந்து அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு பயனபடுத்த முடியுமான பல விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில், நேற்று இந்த விடயங்களை முன்வைத்ததுடன் அதனை ஆராய்ந்த நீதிவான், குறித்த சந்தேக நபரை உடனடியாக சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.

நேற்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு வந்தது. சந்தேக நபருக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரைக்கு அமையவும், தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும், 20017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினி குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே நேற்று சி.ஐ.டி. 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதாக கூறி அவரை 90 நாள் தடுப்புக் காவலில் எடுக்க நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தது.

இதன்போது மன்றில் ஆஜரான பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, 'தனியார் வங்கியொன்றில் உள்ள இந்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கு ஊடாக பாரிய தொகை பணம் பரிமாற்றப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றலை மையப்படுத்தியே 90 நாள் தடுப்பில் வைத்து விசாரிப்பதறகான அனுமதியை பாதுகாப்பு செயலர் அளித்துள்ளார். எனவே அவரை எம்மிடம் ஒப்படைக்க சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட வேண்டும்.' என கோரினார். 

இதற்கு கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் அனுமதியளித்தார். நீதிவானுக்கு மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக விடயங்களை விசாரணை அதிகாரி தெளிவுபடுத்தினார்.

'ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஸ்ரீலங்கா எனும் பெயரிலான பதிவொன்றினை கடந்த 2020 டிசம்பர் 12 ஆம் திகதி கண்டிப்பாக வாசிக்க வேண்டும் எனும் பெயரிலும், 2021 ஜனவரி 7 ஆம் திகதி 'நான் முஸ்லிம் அடிப்படைவாதியாவேன்' எனும் தலைப்பிலும் கூட பதிவுகளை சந்தேக நபரின் முகப்புத்தகத்தில் அவதானிக்க முடிகின்றது. 

கடந்த 2021 ஜனவரி 9 ஆம் திகதி, முஸ்லிம்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தரவுகளை இதற்கு பிறகு கடைப்பிடிப்பதா, இல்லையா என தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உரியது' எனும் பெயரிலும் பதிவொன்று இடப்பட்டுள்ளது. 

அதன் பின்னர், அதே தினத்தன்று சர்ச்சைக்குரிய வெறுப்பூட்டும் அவரது பேச்சு அடங்கிய வீடியோவும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வங்கிக் கணக்குகளில் ஒரு தனியார் வங்கியின் கணக்கிலக்கம் குறித்த விபரங்களே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அண்மைக் காலத்தில் அந்த வங்கிக் கணக்கூடாக 625 இலட்சம் ரூபா பரிமாற்றப்பட்டுள்ளமை தெளிவாகிறது. 

தெளிவான வருமான மார்க்கம் இல்லாத இந்த சந்தேக நபர், மாதார்ந்தம் வீட்டு வாடகைக்காக 80 ஆயிரம் ரூபாவை செலுத்துயுள்ளார். அவரது வாகனத்துக்கு வாடகையாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார். அவரது வர்த்தக நிலையம் தொடர்பில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை வாடகையாக செலுத்தியுள்ளார் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அவரது கணினி பாகங்களை பகுப்பாய்வு செய்த போது, மேலும் பல அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான விடயங்களையும் கண்டறிய முடியுமாக இருந்தது.

எனவேதான் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.' என சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment