மேல் மாகாணத்திலுள்ள தொழில் நிலையங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

மேல் மாகாணத்திலுள்ள தொழில் நிலையங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு பொது போக்கு வரத்துகளில் செல்லும் பயணிகள் மற்றும் மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை இலக்கு வைத்து மீண்டும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது மேல் மாகாணத்திலுள்ள தொழில் நிலையங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தில் இன்று (நேற்று) முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 11 இடங்களில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது கொழும்பிலிருந்து தூரபிரதேசங்களுக்கு பொது வாகனங்களில் செல்லும் பயணிகளை இலக்கு வைத்தும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள மீன் மற்றும் மரக்கறி சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வாராந்த சந்தைகளை இலக்கு வைத்து எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மேல் மாகாணத்திலுள்ள தொழில் நிலையங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய சுகாதார பிரிவினருடன் இணைந்து, பொலிஸாரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்போது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்படுவதாக அடையாளம் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில், இந்த செயற்பாடுகளின் போது, சுகாதார பிரிவினரால் அன்டிஜன், பரிசோதனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன்போது விபரங்கள் சேகரிக்கப்பட்டால், உண்மை விபரங்களை மாத்திரமே வழங்க வேண்டும்.

இவ்வாறு உண்மைத் தகவல்களை வழங்குவதன் ஊடாகவே வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். எவரேனும் போலியான தகவல்களை வழங்கினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மேலும் சிக்கல் ஏற்படும்.

No comments:

Post a Comment