அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம் (புதன்கிழமை) பதவியேற்க உள்ளதால், தலைநகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20ம் திகதி அவர் பதவியேற்க உள்ளார்.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6ம் திகதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஜோ பைடனின் பதவியேற்பு விழாவும் நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் நடைபெற உள்ளது. ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தலைநகர் வாஷிங்டன் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment