"40 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது, வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள்" - ரஞ்சன் ராமநாயக்க - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

"40 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது, வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள்" - ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை (அமர்வுப் படி) பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று, அவரின் யூடியூப் சானலில் வெளியாகியுள்ளது.

அதில் மேசையொன்றின் மீது 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை பரப்பி வைத்து, அதன் முன்பாக இருந்து ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தனக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அது தற்போது மொத்தம் 40 லட்சம் ரூபாவாக கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அந்தப் பணத்தை கஷ்டப்படுகின்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கும் தனது நண்பர்களுக்கு கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் சொந்தமாக உள்ள போதும், தான் இதுவரை வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வேன் ஒன்றினையே போக்கு வரத்துக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் ரஞ்சன் கூறியுள்ளார்.

"இந்தப் பணம் எனக்குத் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ள ரஞ்சன். நான் பராமரிக்க அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் என்று எனக்கு யாரும் இல்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

"இதேபோன்றுதான் கடந்த முறை வாகனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான 'பெர்மிட்' (வரி செலுத்தாமல் வாகனம் வாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் அனுமதிப்பத்திரம்) மூலம் எனக்குக் கிடைத்த பணத்தை கலைஞர்களுக்கு நான் வழங்கினேன்".

"இந்தப் பணத்தைக் கொண்டு செல்லப் போவதில்லை. இங்கு 40 லட்சம் ரூபாய் உள்ளது. இதில் சிறிய செலவுகள் உள்ளன. அவை தவிர மிகுதி அனைத்தையும் மனிதாபிமான முறையில் பகிர்ந்தளிக்கவுள்ளேன்" எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த முறை தனக்கு கிடைக்கவுள்ள வாகன கொள்முதல் பெர்மிட் மூலம் பெறும் பணத்தினையும் இதேபோன்று மக்களுக்காக செலவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"பெரிய வாகனங்களில் சென்று எனக்கு பழக்கமில்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. அந்தக் காலம் எனக்கு ஞாபகமிருக்கிறது. பொதுமக்கள் தினத்தில் என்னைச் சந்திக்க வரும் யாரையும் நான் வெறுங்கையுடன் அனுப்பியதில்லை" என, தான் பிரதியமைச்சராக இருந்த காலத்தை ரஞ்சன் நினைவுகூர்ந்தார்.

"இதோ போதுமான பணம் உள்ளது" என மேசையில் பரப்பியுள்ள பணத்தைக் காட்டி கூறிய ரஞ்சன் ராமநாயக்க; "இன்னும் பணம் சேரும். எனக்கு யூடியூப் சானல் உள்ளது. அதன் மூலம் மாதம் மூன்று நான்கு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதையும் மக்களுக்குத்தான் வழங்கப்போகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் சாதாரணமாக வாழப் பழகி விட்டதாகவும், அதனால் இந்தப் பணம் தனக்கு அதிமானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அதனால்தான் இந்தப் பணத்த பகிர்ந்தளிக்கத் தீர்மானத்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலமான தான் யாரையும் அகௌரப்படுத்தவில்லை எனக் கூறும் ரஞ்சன் ராமநாயக்க, "நான் தனியாக இருக்கிறேன். அதனால்தான் இந்தக் காரியத்தைச் செய்கிறேன்" என்றார்.

ஆகவே பணம் தேவையானவர்கள் தனது செயலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அவருடைய செயலாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தினையும் கூறியுள்ளார்.

இலங்கை சிங்கள சினிமாதுறையில் ரஞ்சன் ராமநாயக்க பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad