மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது - இதுவரை 37 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது - இதுவரை 37 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கிணங்க குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தல் பிரிவாக பிரகடனப்படுத்த அவசியமான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (12.01.2021) நடைபெற்ற கொவிட்-19 கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மாவட்ட கொவிட் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கிண்ணியா மாஞ்சோலை பகுதியில் நேற்று (11.01.2021) புதிதாக சுமார் 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அக்கிராம சேவகர் பிரிவில் மொத்தமாக 28 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அத்துடன் மட்டக்களப்பில் தாதியர் பயிற்சி பெறும் கிண்ணியாவைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக இன்று மாத்திரம் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி தெரிவித்தார்.

அதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டிசம்பர் 20 ஆம் திகதியிலிருந்து இதுவரைக்கும் மொத்தமாக 37 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின் அகமட் லேன், ஹிஜ்ரா வீதி, மாஞ்சோலை வீதி மற்றும் கிண்ணியா மீன் சந்தை வீதிகள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் கிண்ணியா மீன் சந்தை தொடக்கம் ஹிஜ்ரா வீதி வரையுள்ள பிரதான வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் உள்நுழையும் வீதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் சுமார் 817 குடும்பங்களைச் சேர்ந்த 2,917 நபர்கள் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மட்டக்களப்பில் தாதியர் பயிற்சியில் ஈடுபட்டவர்களில் இருவர் தொற்றுக்கள் இல்லாத காக்காமுனை மற்றும் றஹ்மானியா கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பவர்கள் என்பதனால் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment