இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டன - அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை - கிளிநொச்சி மாவட்டத்தில் வான் பாயும் பல குளங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டன - அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை - கிளிநொச்சி மாவட்டத்தில் வான் பாயும் பல குளங்கள்

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கான நீர் வருகை தொடர்ந்து காணப்படுவதனால் குளத்தின் 14 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இரண்டு வான் கதவுகள் 2 அடியாகவும், 4 வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமாகவும், 4 வான் கதவுகள் 1 அடியாகவும், 4 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இரணைமடு குளத்திற்கான நீர் வருகை தொடர்ந்தும் காணப்படுவதனால் திறக்கப்பட்ட வான் கதவுகளின் அளவுகள் அதிகரிக்கப்படலாம் எனவும், கனகராயன் ஆற்று படுக்கையின் கீழ் உள்ள மக்கள் குறிப்பாக பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி நீர்ப்பாசன குளங்களான கல்மடு குளம் 10 அங்குலமும், பிரமந்தனாறு குளம் 8 அங்குலமும், கனகாம்பிகை குளம் 5 அங்குலமும் வான் பாய்ந்த வருகின்றது. மேலும் அக்கராயன் குளம் 7 அங்குலமும், கரியாலை நாகபடுவான் குளம் 10 அங்குலமும், புதுமுறிப்பு குளம் 8 அங்குலமும், குடமுருட்டி குளம் 7 அங்குலமும், வன்னேரிக்குளம் 4 அங்குலமும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நீர் நிலைகளை அண்மித்த மற்றம் நீர் வடிந்தோடும் பகுதிகளிலுள்ள மக்களிற்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது வாழ்வாதாரங்களை பாதுகாப்பதுடன், பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றது.

இதேவேளை கனகாம்பிகை குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம்பொக்கனை, பெரியகுளம், உழவனுர், பிரமந்தனாறு உள்ளிட்ட தாழ்வு நில பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

குளங்கள் மற்றும் நீர் தேங்கியுள்ள ஆழமான பகுதிகளை பார்வையிட செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தொடர்பில் பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், இடர்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக அல்லது பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment