'இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு' - டாக்டர் கே.ஏ.சீ. ரன்டிம விஜேசேகர தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

'இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு' - டாக்டர் கே.ஏ.சீ. ரன்டிம விஜேசேகர தெரிவிப்பு

அண்மைக் காலமாக இலங்கையில் புதிய எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தளவில் பாதுகாப்பற்ற பாலியல் உறவின் மூலமே ஏற்படுகின்றது.

2019ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 359 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 82 வீதம் ஆண்களென, கல்முனைப் பிராந்திய பாலியல் நோய் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சீ. ரன்டிம விஜேசேகர தெரிவித்தார்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி 'இளைஞர்களின் பொறுப்பை நிறைவேற்றும் எச்.ஐ.வீயை தடுப்போம்' எனும் தொனிப் பொருளில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சீ. ரன்டிம விஜேசேகர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

2016 முதல் 15 தொடக்கம் 24 வயதுடைய இளைஞர்களிடயே எச்.ஐ.வி. தொற்றுகள் அதிகமாக காணப்படுகின்றது. சமூக மாற்றத்திற்கான மிகச் சிறந்த இயந்திரம் இளைஞர்களாகும். இளைஞர்களிடையே இத்தொற்று பரவுவதை தடுப்பதற்கு சமூகத்தின் பங்கு அளப்பெரியதாகும்.

2025ஆம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேசிய மூலோபாயத் திட்டத்தை சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் தேசிய பாலியல் தொற்று நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது.

கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் எச்.ஐ.வியை கண்டறிய இலவசமாக இரத்த பரிசோனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்சோதனைகளின் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து கொள்ள முடிவதுடன் எச்.ஐ.வி தொற்றாளர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்று சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்.

இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு நவீன வசதிகளுடனான மருத்துவ வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு இதற்கு கூடுதலான நிதியும் செலவிடப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை 47 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் இணைய வழி மூலம் உரையாற்றினர்.

ஒலுவில் விசேட, பாலமுனை விசேட நிருபர்கள்

No comments:

Post a Comment