சுருக்கு வலை மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்கு விதிகளை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதும் தடை செய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02.12.2020) மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனினால் வாய்மூல வினா நேரத்தில், சுருக்குவலை செயற்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "கடற்றொழில் நடவடிக்கைகளில், சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கு சில நிபந்ததனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், மேற்படி ஒழுங்கு விதிகளை மீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான முறைப்பாடுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் சுருக்கு வலைத் தொழிலை தடுத்து நிறுத்திய போது, அவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு தொடர்ந்தும் குறித்த தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முல்லைத்தீவு பகுதியிலும் சிறு தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக சுருக்குவலை பயன்படுத்துவதற்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்திய கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்திருந்தது.
திணைக்ளத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிராக சுருக்கு வலைக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளை மீறி சுருக்கு வலை செயற்பாட்டில் ஈடுபடும் கடற்றொழில் படகுகளுக்கு எதிராக உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வரும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினரும், இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினரும், இலங்கை காவல் துறையினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சுருக்கு வலை மட்டுமல்லாது, எமது கடல் வளங்களுக்கும், ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணுகின்ற மற்றும் தரமான கடலுணவு அறுவடைகளை பாதிக்கின்ற கடற்றொழில் முறைமைகளைத் தடை செய்யக் கூடிய வலுவானதும், நியாயமானதுமான ஒழுங்குவிதிகளை கடற்றொழில் அமைச்சு வகுத்து வருகிறது.
இந்த ஒழுங்கு விதிகளை விதிகளை சட்டமாக்குவதற்கும், அதை முறையாக செயற்படுத்துவதற்கென போதிய ஆளணிகளை உள்வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனவே எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான கற்றொழில் முறைகளும் கட்டுப்படுத்துப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment