விடுதலைப் புலிகளை அழித்தபோதே கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் - பள்ளிவாசலில் புகுந்து கத்தி, வாள்களை எடுப்பதல்ல தேசிய பாதுகாப்பு : சரத் வீரசேகர ஆவேசம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

விடுதலைப் புலிகளை அழித்தபோதே கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும் - பள்ளிவாசலில் புகுந்து கத்தி, வாள்களை எடுப்பதல்ல தேசிய பாதுகாப்பு : சரத் வீரசேகர ஆவேசம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற புலிகளின் அரசியல் கட்சியும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களை தடை செய்யாது அரசியலில் இணைத்ததே நாம் செய்த மிகப்பெரிய தவறு என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். 

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவானால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பே ஒரு நாட்டின் மிக முக்கியமான காரணியாகும். ஒரு தாக்குதல் நடந்தவுடன் பள்ளிவாசலில் புகுந்து கத்திகளையும் வாள்களையும் எடுப்பதல்ல தேசிய பாதுகாப்பு. 

நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் தேசிய புலனாய்வு பலப்படுத்தப்பட்டது. எமது ஆட்சியில் அதனை துரிதப்படுத்திய காரணத்தினால்தான் இரு தினங்களுக்கு முன்னர் கிளைமோர் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யுத்தம் இல்லாத அரசியல் இருக்க முடியும், ஆனால் அரசியல் இல்லாத யுத்தமொன்று இருக்கவே முடியாது. உலக அரசியலில் வரலாற்றில் இதனை நாம் பார்க்க முடியும். அரசியலினால்தான் யுத்தம் வெற்றி கொள்ளவும் முடியும், யுத்தத்தை தோற்கடிக்கவும் முடியும். 

2009 ஆம் ஆண்டு வெளிநாட்டு தலையீடுகள் பல ஏற்பட்டு யுத்தத்தை நிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தீர்மானத்தின் காரணமாகவே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதனால்தான் சரத் பொன்சேகா போன்றவர்கள் வீரர்கள் ஆனார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று புலிகளை ஆதரித்து அனுஷ்டிப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் சக்தியாகும். எனவே மீண்டும் புலிகள் உருவாகினால் அதற்கு கூட்டமைப்பே காரணமாகும்.

உலக நாடுகளில் பயங்கரவாத குழுக்கள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்களின் அரசியல் கட்சிகளை தடை செய்தனர். ஜெர்மனியில் ஹிட்லரை அழித்தவுடன் அவரின் நாசி கட்சியையும் அழித்தனர். கம்போடியாவில் போல்போட் என்ற பயங்கரவாதியை கொன்றவுடன் அவரின் கேமரூன் என்ற அரசியல் கட்சியும் முழுமையாக தடை செய்யப்பட்டது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் பாத் என்ற அரசியல் கட்சி முழுமையாக தடை செய்யப்பட்டது.

ஆனால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அந்த தவறை செய்ததனால்தான் இன்று அவர்கள் புலிகளை போற்றிக் கொண்டுள்ளனர். எனவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவானால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment