8 வைத்தியர்கள், பிரதான சிறை பாதுகாவலர் உள்ளிட்ட 26 பேரிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

8 வைத்தியர்கள், பிரதான சிறை பாதுகாவலர் உள்ளிட்ட 26 பேரிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

விசாரணைகளை பொறுப்பேற்று 48 மணி நேரத்துக்குள் அந்த பொலிஸ் குழு, மஹர சிறை வைத்தியசாலையில் கடமையாற்றிய 8 வைத்தியர்கள், பிரதான சிறை பாதுகாவலர் உள்ளிட்ட 26 பேரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ரந்தெனியவின் கீழ் 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவே இந்த விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்ததாவது, 'சி.ஐ.டி.யினர் இந்த சம்பவம் தொடர்பில் 26 வாக்குமூலங்கள் வரை இதுவரை பதிவு செய்துள்ளனர். 

விஷேடமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் சேவையாற்றிய 8 வைத்தியர்கள், ஆண் தாதியர்கள் இருவர் ஆகியோரும் இதில் உள்ளடங்குவர். இதனைவிட சிறைச்சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட 10 சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன் இந்த களேபரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மீள சிறைக்கு திரும்பிய 6 கைதிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. அதன்படி இந்த சம்பவம் தொடர்பில் 26 வாக்குமூலங்கல் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறைச்சாலைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை கணக்கீடு செய்தல், சிறைக் கைதிகளுக்கு மேலதிகமாக இந்த களேபரத்தை தூண்டிய அல்லது திட்டமிட்ட வெளி நபர்கள் தொடர்பிலும் சி.ஐ.டி. விசாரணையில் அவதானம் செலுத்தியுள்ளது.' என தெரிவித்தார்.

இதனிடையே, இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைக்குழு தலைவர், பணிப்பாளர் உள்ளிட்டவர்களுடன் ஆராய்ந்து வரும் நிலையில், மேலும் பல வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன. 

விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

No comments:

Post a Comment