விசேட வைத்திய குழுவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் - புதைக்கும் போது கொங்றீட் செய்ய தயாராகவுள்ளோம், முழு செலவையும் நான் ஏற்கிறேன் : பைசல் காசிம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

விசேட வைத்திய குழுவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் - புதைக்கும் போது கொங்றீட் செய்ய தயாராகவுள்ளோம், முழு செலவையும் நான் ஏற்கிறேன் : பைசல் காசிம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

விசேட வைத்திய குழுவை சந்திப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அத்துடன் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதால் அவர்கள் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ தேவைகளுக்காக செல்ல அச்சப்படுகின்றனர். அதனால் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலத்தை எரிக்கும் விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் முஸ்லிம்கள் மிகவும் மனவருத்தத்துடன் உள்ளனர். 

அமைச்சரவையிலும் மக்கள் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் இந்த விடயம் பேசப்பட்டது. ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் குழு குறித்து முஸ்லிம்கள் மனவருத்தத்துடன் உள்ளனர். 

கொவிட் பரிசோதனை மேற்கொள்ளும் வைத்தியசாலைகள் பாலமுனை மற்றும் காத்தான்குடியில் உள்ளன. அங்குமுறையான கழிவகற்றும் திட்டங்கள் இல்லை. கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள நீருக்குள்ளும் நிலத்துக்குள்ளுமே செல்கின்றன. இவ்வாறான பின்புலத்தில் அடக்கம் செய்யப்படும் சடத்திலிருந்துவரும் நீரில் கொவிட் பரவும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விசேட வைத்திய குழுவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சரை கேட்கின்றேன். 

சடலத்தை புதைக்கும் போது அதற்கு கொங்றீட் செய்யவும் நாம் தயாராகவுள்ளோம். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன். 

முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளனர். வைராக்கியம் ஏற்படுத்த வேண்டாம். அவர்களின் மனதை வெற்றி கொள்ளும் வகையில் செயற்ட வேண்டும். எமது பிரதேசங்களிலும் கொவிட் பரவியுள்ளது. முஸ்லிம்கள் வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை எடுப்பதற்கு செல்ல அச்சம் கொண்டுள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்யவும் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். கள்ளத்தனமாக வீடுகளிலேயே இருக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாக மாறும். ஆகவே, முஸ்லிம் பிரதேசங்களில் சடலங்களை அடக்கம் செய்யும் அனுமதியை வழங்க வேண்டும். அதற்கான பாதுகாப்பை நாம் வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment