உலக சுகாதார ஸ்தாபனத்துடன் உடன்படிக்கைகளை செய்துள்ளோம் - இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் உடன்படிக்கைகளை செய்துள்ளோம் - இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலில் இருந்து மீள எமது மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே எமது அடுத்த இலக்காக உள்ளது. எனினும் இன்னமும் கண்டு பிடிக்கப்படாத ஒரு தடுப்பூசிக்காக எதிர்பாத்துக் கொண்டுள்ளோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் விடயத்தில் தேசிய மட்டத்திலான விடயங்கள், கண்காணிப்பு, அவசர நிலைமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம். சர்வதேச போக்கு வரத்து பயணங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சுகாதார சேவைகள் எக்காரணம் கொண்டும் வீழ்ச்சி கண்டிராத விதத்தில் கொவிட் நிலைமைகளையும் கையாண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரங்கள், கடன் உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளை எவ்வாறு கையாண்டு வருகிறோம் என்பதை இந்த சபைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளேன். கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த தெளிவான வேலைத்திட்டம், மற்றும் அதனை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

இதன் அடுத்த கட்டமாக கொவிட்-19 வைரஸ் பரவலுக்கான தடுப்பூசியை கொண்டுவரும் தேவையே உள்ளது. இந்த வேலைத்திட்டம் உயரிய தரம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டித்தன்மை உள்ளது. 

எனினும் எமது மக்களுக்கு தடுப்பூசிகளை கொடுக்கையில் எமது மக்கள் சுகாதாரத் துறை மீதும் தடுப்பூசி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். குறைந்த கால மற்றும் நீண்ட கால உபாதைகள் வராத விதத்திலான தடுப்பூசிகளை வழங்குதல். தேசிய பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படாத விதத்தில் விலைகளை சமாளிக்கக் கூடியதான தடுப்பூசியாக அது இருக்க வேண்டும். 

2021 ஆம் ஆண்டில் கொவிட்-19 வைரஸை தடுக்கும் வேலைத் திட்டத்தில் இவை பாரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன். எனவே இந்த சவால்களை வெற்றி கொண்டு அதற்கான சிறந்த தடுப்பூசி ஒன்றினை பெற்றுக் கொடுக்கவும் அதற்கான ஆய்வுகளை செய்யவும் சுகாதார அமைச்சின் சார்பில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் இருந்தே தடுப்பூசி குறித்து கவனம் செலுத்தி வந்தோம். அதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து உடன்படிக்கைகளை செய்துள்ளோம். இதன்போது பரிசோதனைக்காக 20 வீதமான இலங்கையர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன் 4.2 மில்லியன் மக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். 

ஆனால் இன்னமும் தடுப்பூசி கண்டறியும் நடவடிக்கைகள் மூன்றாம் கட்டத்தை தாண்டவில்லை. எப்போது தடுப்பூசி வழங்கப்படும் என்பது எவருக்குமே தெரியாதுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்டதும் அதனை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் கண்டறியப்படாத ஒரு தடுபூசிக்காக நாம் இவ்வாறான முன்னாயத்த வேலைத் திட்டங்களை செய்துள்ளோம்.

மேலும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் வர்த்தகத்தை சமாளிக்க தற்காலிக காப்புறுதி வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான வேலைத்திட்டம் என்றே நாம் கருதுகிறோம். 

2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவில் கொவிட்-19 கட்டுப்பாட்டில் வரும். நாமும் அதனை இலக்காக கொண்டு இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வரவு செலவு திட்டத்தில் கவனத்தில் கொண்டுள்ளோம். மாவட்ட வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment