இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்படி பிரதேசங்களுக்கு செல்வதற்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளதுடன் நேற்றுமுன்தினம் உக்ரேனில் இருந்து 186 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
அவர்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இரண்டு வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பர் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக ரஷ்யாவிலிருந்து உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் சூழலை கவனத்திற் கொண்டு ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விரும்பும் உல்லாசப் பிரயாணிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் உக்ரைன் உல்லாசப் பிரயாணிகள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் அன்றைய தினம் இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல் தொழிலாளர்களும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment