புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் கல் வீச்சு - மாவனெல்லையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் கல் வீச்சு - மாவனெல்லையில் சம்பவம்

(எம்.எப்.எம்.பஸீர்)

மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட தேவாலயம் முன்பாக உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியாதோர் கல் வீச்சு தாக்குதல் நடாத்தியதில், வெளிப்புற கண்ணாடி சேதமடைந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவனெல்லை நகருக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் நேற்று மாலையாகும் போது விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட, இராணுவத்தினரும், மேலதிக பொலிஸ் படையும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தன.

புத்தர் சிலை கண்ணாடி மறைப்பு மீதான தாக்குதலை அடுத்து, மாவனெல்லை மற்றும் ஹிங்குல நகரில் இந்த விஷேட பாதுகாப்பு அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம், சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்துக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரும் அழைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே மாவனெல்லை பகுதி கல் குவாரி ஒன்றின் களஞ்சியத்திலிருந்த வெடி பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டி.யினர் ஊடாக விஷேட விசாரணை நடாத்தப்படும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னரும் மாவனெல்லை பகுதியில் இவ்வாறான புத்தர் சிலை தகர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றமையால் இது குறித்து சிறப்பு விசாரணைகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment