மரணித்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டும் எனும் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

மரணித்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டும் எனும் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழாமின் பெரும்பான்மை முடிவின் படி குறித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களின் பரிசீலனை நேற்று (30) மற்றும் இன்று (01) ஆகிய இரு தினங்களாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெனாண்டோ, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுக்களை பரிசீலித்த பின்னர் தீர்ப்பை அறிவித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மூன்று நீதிபதிகள் கொண்ட குழாமின் பெரும்பான்மையினரின் முடிவுக்கு அமைய, இவ்வனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக, திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.

இரு நீதியரசர்கள் மனுக்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்த நிலையில், வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்கலாம், எனும் நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மனுக்கள் நேற்றையதினம் பரிசீலிக்கப்பட்டபோது, கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களில் இருந்து வைரஸ் பரவியதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என, மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான, எம்.ஏ. சுமந்திரன், பைஸர் முஸ்தபா, சாலிய பீரிஸ், நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

குறித்த வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த 2 முஸ்லிம்களின் உறவினர்கள், குரல்கள் இயக்கம் அமைப்பு உள்ளிட்டோரால் 11 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment