(ஆர்.ராம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறாடா உள்ளிட்ட புதிய பதவிகள் அனைத்தும் புதிய ஆண்டிலேயே நியமிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டின் ஐனவரி மாதம் ஐந்தாம் திகதி கூட்டமைப்பின் பாராமன்றக் குழுவைக் கூட்டி தீர்மானம் எடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் அடங்கிய வரைவு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடா பதவியிருந்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொறாடா பதவிலிருந்து விலகியமை விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இதன்போது, மாவை சோ.சேனதிராஜா, புதிய கொறடா, ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பின்பற்றலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.
எனினும் கொறாடா பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் எவ்விதமான கருத்துக்களை கூட்டமைப்பின் தலைவர் வெளிப்படுத்தாத நிலையில் அவ்விடயத்தினை பாராளுமன்றக்குழு கூட்டத்தில் பார்ப்போம் என்று கூறப்பட்டது.
இதேநேரம், கொறாடா பதவியிலிருந்து விலகிய சிறிதரனிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடியுங்கள் பாராளுமன்றக் குழுவில் ஏனையவற்றை பார்த்துக் கொள்வோம் என்று கூறியபோதும் தனது தீர்மானத்தினை மாற்ற முடியாது என்று பதிலளித்துள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு சுமந்திரன், சிறிதரனை முன்மொழிந்துள்ள நிலையில் அப்பதவியைப் பெற்றுக் கொள்வதற்காகவே கொறாடா பதவியை துறந்தீர்கள் என்று வினவியபோது, கொறடாவோ, பேச்சாளரோ எந்தப் பதவியையும் நான் இலக்கு வைத்துச் செயற்படவில்லை. தற்போதைக்கு பதவி நிலைகளில் இருந்து ஒதுங்கியிருக்கலாம் என்ற மனோநிலையே உள்ளது.
மக்கள் தமது பிரதிநிதி என்ற பொறுப்புடன் கூடிய அதியுயர் பதவியை தந்திருக்கின்றார்கள். அதுவே போதுமானது என்று பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment