(எம்.எப்.எம்.பஸீர்)
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வைப்பதற்கு அதி குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் 5 ஐ சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, நீதி அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைத்திருப்பதில் உள்ள எச்சரிக்கை நிலைமைகளை கவனத்தில் கொண்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற, கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்த கலந்துரையாடலில், அது தொடர்பில் உறுதியான இறுதி முடிவு எட்டப்படும் வரை, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அதி குளிரூட்டப்பட்ட கொள்கலனின் வைத்திருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையவே, பொறுப்பு வாய்ந்தோருக்கு கடிதம் எழுதியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குனவர்தன, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம், களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம், நீர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம், கண்டி சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இந்த 5 அதி குளிரூட்டப்பட்ட கொள்கலன்களையும் வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.
இது இவ்வாறிருக்கும் நிலையில், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு அதி குளிரூட்டப்பட்ட கொள்கலனொன்று வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment