பொதுமக்களின் சில பொறுப்பற்ற செயற்பாடுகளினால் டெங்கு நுளம்பு எமது பிரதேசத்தில் பெருகலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்பொழுது பெய்யும் பருவ மழையினால் எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோய் பரவல் ஏற்படலாம். எனினும், யாழ். போதனா வைத்தியசாலையில் இம்மாதம் நோயாளி எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பொதுமக்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளினால் டெங்கு நுளம்பு எமது பிரதேசத்தில் பெருகலாம்.
குறிப்பாக மழை பெய்த பின்னர் வீதியோரங்களில் திண்மக் கழிவுகளை வீசி விட்டுச் செல்லும் சம்பவங்கள் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஏனெனில் கொரோனா பரவுகின்ற காலத்திலுருந்தே நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் வைத்திய சேவைகளை தொடந்து நடத்தி வருகின்றோம்.
இந்நிலையில், குறைத்தளவு வளத்துடனான வைத்திய சேவையினை மேற்கொள்வதற்கு, டெங்கு நோயாளர்கள் அதிக அளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கு பொது மக்கள் மத்தியில் முன்கூட்டியே விழிப்புணர்வு செயற்பாட்டினை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, சுற்றாடல் சுத்தம் மிகவும் முக்கியமானது. வீடுகளில் நீர் தேங்கிய இடங்கள், மழைக்குப் பின்னர் சில இடங்களில் நீர் தேங்கி இருப்பின் அவற்றில் நுளம்பு குடம்பிகள் பெருகலாம். எனவே அவற்றினை இல்லாது செய்தல் அவசியமாகும்.
இந்த விடயத்தில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் குருதிப் பரிசோதனை செய்வதன் மூலம் அதற்குரிய சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment