(செ. தேன்மொழி)
போலி டொலர்களை அச்சிடுவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் கைப்பற்றப்பட்ட டொலர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளுக்கமைய, இந்த நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி டொலர்களை அச்சிடுவதற்கு அவசியமான விசேட கடதாசி மற்றும் அச்சியந்திரம் என்பவற்றை சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டுக்கு எடுத்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று (25) அநுராதபுரம் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் அண்மையில் 100 டொலர்கள் பெறுமதியுடைய போலி நாணயத்தாள்கள் 327 கைப்பற்றப்பட்டிருந்தன.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், இந்த போலி டொலர்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி மற்றும் அச்சியந்திரத்தை நாட்டுக்கு எடுத்து வந்த நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதற்கமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக போலி நாணயத்தாள் அச்சிடுவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை தொடர்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேற்படி விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னைடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment