(செ.தேன்மொழி)
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத மற்றும் உரிய வயதெல்லையை பூர்த்தி செய்யாதவர்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்போது, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சிறைத் தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அறவிடுவதற்கும் அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்களுக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் தங்களது வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் வினோதமான முறையிலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது குற்றச் செயற்பாடாகும். அதனால் இவ்வாறு வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கான வாகனங்களை வழங்கி வரும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், உரிய வயது எல்லையை பூர்த்தி செய்யாமல் வாகனங்களை செலுத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நபர்களுக்கும் வாகனங்களை வழங்கிய நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அறவிடவும் அனுமதி உள்ளது. அதனால் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:
Post a Comment