இலங்கையை நிலக் கண்ணி வெடி இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் செயல்படும் - அமைச்சர் இந்திக அனுருத்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

இலங்கையை நிலக் கண்ணி வெடி இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் செயல்படும் - அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையை நிலக் கண்ணி வெடி இல்லாத நாடாக மாற்ற அரசாங்கம் செயல்படும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கண்ணி வெடி அகற்றல் திட்டம் விரைவாக செயற்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிக்காக ஒதுக்கியுள்ளது என்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ரூ. 7000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கிராமப்புற மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிகுழு தலவர் பஷில் ரோஹண ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றுதல், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை உறுதிப்படுத்துவது, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2009 யுத்த வெற்றியின் பின்னர் இன்று வரை நாட்டில் கண்ணி வெடி முற்றாக அகற்றப்படவில்லை என்றும் கண்ணி வெடிகளை அகற்றவும் மக்களுக்குத் தேவையான நிலங்களை விடுவிக்கவும் தற்போதைய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மனிதாபத்துடனான நிலக் கண்ணி வெடி அகற்றும் திட்டத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக விசேட கண்காணிப்பு விஜயத்தினை நேற்று (22) மேற்கொண்டபோதே அமைச்சர் இதனைக் கூறினார். கிளொநொச்சியில் உள்ள முகமாலை முன்னரங்கு பாதுகாப்பு வலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் மீள்குடியேற்றப் பிரிவின் " நிலக் கண்ணி வெடிகளை அகற்றும் செயல் தொடர்பான தேசிய நிலையத்தினால்" மனிதாபிமான நோக்குடன் செயல்படுத்துகிறது. போரின் போது நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பகுதிகளில் அதை அகற்ற விரைவுபடுத்துவதும், அந்த இடங்களில் மக்களைப் பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நிலக் கண்ணி வெடியின் ஆபத்து சம்பந்தமான பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபேசிறிவதன, பாதுகாப்புப் படையின் பொறியியற் பிரிவின் படைத்தளபதி ப்ரிகேடியர் எம்.கே. ஜயவர்தன உட்பட பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment