(இராஜதுரை ஹஷான்)
அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனவே மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நிச்சயம் நடத்தப்படும். அரசியல் காரணிகளை கொண்டு இந்த முறைமையை ஒருபோதும் இரத்து செய்ய முடியாது என நீர் வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆளும் தரப்பில் காணப்படும் இரட்டை நிலைப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பிறிதொரு தரப்பினர் மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்துக்கள் அவரவர் தனிப்பட்ட நோக்கமாகும்.
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் முதல் காலாண்டில் பழைய முறைமையில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.
மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் காரணிகளை கொண்டு மாகாண சபை முறைமையை இரத்து செய்ய முடியாது.
அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறும் நோக்கில் மாகாண சபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைவதை முன்கூட்டியே அறிந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபை தேர்தலை நடத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் உரிமை மாகாண சபைத் தேர்தல் ஊடாக வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்தார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் உரிமையினை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. கடந்த அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்திய தமிழ் அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
தேர்தல் முறைமையில் சிக்கல் நிலை ஏற்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் காரவரையறையின்றி பிற்போடப்பட்டது. இதன் காரணமாகவே மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றன.
மாகாண சபை முறைமையில் குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு மாகாண சபை பலப்படுத்தப்படும்.
மாகாண சபைத் தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமை. மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தும் சாத்தியக்கூறுகள் தற்போது காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment