(சர்ஜுன் லாபீர்)
எமது நாடு கொரோனா தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அக்கறைப்பற்று பிரதேசத்திற்கு அடுத்ததாக சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்கள் கொரோனா தொற்றுக்கு அதிகம் முகம் கொடுக்கும் பிரதேசங்களாக மாற அதிக வாய்ப்புள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஜ்வத் தெரிவித்தார்.
கொரோனாவினை கட்டுப்படுத்துவது சம்மந்தமான விழிப்புணர்வு கூட்டம் ஒன்று இன்று (12) சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் சாய்ந்தது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். அஜ்வத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த நிலைமை தொடர்ந்து சென்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட (Lock Down) பிரதேசமாக பிரகடனம் செய்யப்படும் சாத்தியம் அதிகமுள்ளது. இதனை தடுக்க எங்களோடு சேர்ந்து பணியாற்ற மக்கள் முன்வர வேண்டும்.
கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். சாய்ந்தமருது பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் உக்கிரமடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லோருடைய உதவியும் பங்களிப்பும் அவசியம் என குறிப்பிட்டார்
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தல், சிறுவர்கள், பெரியவர்கள் வெளியேறுதலை முற்றாகத் தவிர்த்தல், வீதிகள், தெருக்கள், சந்திகளில் மைதானங்களில் தேவையின்றிக் கூடுதல் விளையாடுதல் என்பனவற்றை தவிர்த்தல், வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லுதல், எந்த நிலையிலும் 5 அடி சமூக இடைவெளி பேணிக் கொள்ளல், கொரோனா வைரஸ் அதிகமுள்ள அபாய பிரதேசங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்தல், அடிக்கடி இரு கைகளையும் சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவுதல் போன்ற சுகாதார செயற்பாடுகளை மக்கள் கடைப்பிட்டிது நடக்க வேண்டும்.
அத்துடன் வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், போகிறவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் உரிய அதிகாரிகள், கிராம சேவகர்கள், சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன் இந்த திட்டத்துக்காக பொலிஸ் மற்றும் முப்படையினர், சுகாதார திணைக்களத்தினைச் சேர்ந்த சேவைக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கொரோனா விழிப்புனர்வு குழு அங்கத்தவர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச பொதுச் சுகாதார சேவை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment