(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
புரவி சூறாவளியால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். அத்துடன் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிதி, மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து, புரவி சூறாவளி தொடர்பான அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் 27 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கமைய இலங்கை சூறாவளி தாக்கத்திற்கு உள்ளாகவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் உடனடியாக செயற்படக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல் திணைக்களம், நிவாரண பிரிவு, நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இதற்கு முகம் கொடுக்கக் கூடியவாறு முன்தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அனர்த்தங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் ஒரு மில்லியன் ரூபா மாவட்ட செயலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றால் போன்று மேலும் நிதியை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.
அத்துடன் அனர்த்த பாதுகாப்பு மத்திய நிலையங்களில் கொவிட் தொற்றுப் பரவுவதை தடுக்கும் வகையில் முறையான சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முறையான சுகாதார முறை தொடர்பாக மக்களை அடிக்கடி தெளிவுபடுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
தேவைவயான நேரத்தில் செயற்படும் வகையில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் , முப்படையினரின் முகாம்கள் ஆகியவற்றுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment