முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய இப்போது மாத்திரம் ஏன் பிரச்சினையாக இருக்கின்றது - சிங்கள ராவய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய இப்போது மாத்திரம் ஏன் பிரச்சினையாக இருக்கின்றது - சிங்கள ராவய அமைப்பு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்பது மாத காலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய முடிந்தது என்றால், இப்போது மாத்திரம் ஏன் இது பிரச்சினையாக இருக்கின்றது? என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற சர்ச்சையொன்று தற்போது உருவாகியிருக்கிறது. இந்நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் சடலங்களை அங்கிருந்து அகற்றும் வரையில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகியிருப்பதற்கு அவ்வைத்தியசாலையில் மருத்துவர் ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது.

ஏனெனில் சுகாதார நெருக்கடியொன்றின்போது அது குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சுகாதாரப் பணிப்பாளரிடமே காணப்படுகின்றது. அவர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களுக்கான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காலி நீதிமன்றம் அந்த சடலங்களை பிரேத அறையிலேயே வைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் விளைவாக பிரேதப் பரிசோதனை வைத்தியர்களிதும் சிற்றூழியர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும். தற்போது இது சமூகத்தின் மத்தியில் வெகுவாகப் பரவி விட்டது. 

சடலங்களைத் தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் இனவாதத்தை நோக்கித் தள்ளப்படலாம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கின்றார்.

அவ்வாறெனின் இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி அவருக்கு சில விடயங்கள் தெரிந்திருக்கின்றன. நாட்டில் இல்லாத பிரச்சினைகளை அவர் தோற்றுவிக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார் என்றார்.

No comments:

Post a Comment