சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் நிபந்தனை பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் நிபந்தனை பிணையில் விடுதலை

சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கை உரிமையாளர் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் ஹொங்கொங்கில் அமுலுக்கு வந்தது. தேசிய பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஹொங்கொங் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹொங்கொங்கின் அரசியல் உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிட்டு வருகிறது.

இதற்கிடையில், ஹொங்கொங்கின் மிகப்பெரிய பத்திரிக்கை நிறுவனமாக செயல்பட்டுவரும் நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ். ஹொங்கொங் ஜனநாயத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இந்த பத்திரிக்கையின் உரிமையாளர் ஜிம்மி லேய். 73 வயதான ஜிம்மி லேய் தனது நாளிதழ் மூலம் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதையடுத்து, ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையை நடத்து நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ஆதரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை அலுவலக இடத்தை ஒப்பந்தத்தை மீறி பயன்படுத்தியதாக ஜிம்மி லேய் மற்றும் அவரது 2 ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு 3 பேரும் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை உரிமையாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹொங்கொங்கில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபரான ஜிம்மி லேய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹொங்கொங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனக்கு பிணை வழங்கக்கோரி ஜிம்மி லேய் ஹொங்கொங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று (23) நடைபெற்றது.

விசாரணையின் போது ஜிம்மி லேய்க்கு பிணை வழங்க ஹொங்கொங் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஹொங்கொங் அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஜிம்மி லேய்க்கு பிணை வழங்கியது.

அதன் படி பிணை பெறும் ஜிம்மி லேய் அபராதத் தொகையாக 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஹொங்கொங் பணம்) மதிப்பிலான பணத்தை அபராத தொகையாக செலுத்த வேண்டும்.

பிணை மூலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஜிம்மி லேய் தனது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், 

வெளிநாட்டு அதிகாரிகளுடன் எந்த வித ஆலோசனையும் நடத்தக்கூடாது, செய்தி நிறுவனங்களிடம் பேசத் தடை விதிக்கப்படுகிறது, எந்த வித அறிக்கையும் வெளியிடக்கூடாது, சமூக வலைதளங்களில் எந்தவித கருத்துக்களையும் பதிவிடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை பிணை வழங்கப்பட்டபோதும் ஜிம்மி லேய் வீட்டுச் சிறையில் வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது. பல நாட்கள் சிறைத் தண்டனைக்கு பின்னர் ஜிம்மி லேய் நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு ஹொங்கொங்கில் பேசுபொருளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad