மறைந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் பல்துறை வித்தகர் -அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

மறைந்த மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் பல்துறை வித்தகர் -அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் கிழக்கிலங்கை, சாய்ந்தமருது மண்ணிலிருந்து கோலோச்சிய பெருந்தகை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நண்பர் மருதூர் ஏ. மஜீத்தை பல்துறை வித்தகர் என்றால் மிகையாகாது. கல்வியலாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும், மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடுடையவராகவும், தற்காப்புக் கலையில் கைதேர்ந்தவராகவும், இவை அனைத்தையும் விட கிழக்கு மாகாண நாட்டாரியலில் முத்திரை பதித்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும் அவர் விளங்கினார்.

பழகுவதற்கு மிகவும் இனியவராக இருந்த அவரிடத்தில் ஒரு வித்துவச் செருக்கு இருந்தது. அதனை இலக்கிய ஆணவம் என்று கூடக் கூறலாம். இலக்கியத்தில் மட்டுமல்லாது, அவர் ஈடுபட்ட எந்தத் துறையிலுமே அன்னாருக்குச் சரியெனப்பட்டதை எவராவது வித்தியாசமாக விமர்சித்து அவர் மீது அழுத்தம் செலுத்த முற்பட்டால், அதற்கு அடிபணிய மறுக்கும் தன்மை அவரில் இயல்பாகவே குடிகொண்டிருந்தது.

இலங்கைக்கும் அப்பால் தமிழகம் தொட்டு மலேஷியா வரை இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுகளில் அவரது பங்களிப்பு இருந்திருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகப் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அசைக்க முடியாத ஆளுமையினால் அதிகம்ஈர்க்கப்பட்டு, அவரால் அரவணைக்கப்பட்ட மருதூர் ஏ.மஜீத் எமது கட்சியின் வளர்ச்சியில் ஊணாகவும், உரமாகவும் இருந்திருக்கின்றார்.

தமது நூல்களின் வரிசையில் பதினெட்டுத் தொகுதிகள் வரை எழுதியிருக்கும் அவர், எனது குடும்பப் பின்னணியை வைத்து எழுதிய “வேர்” என்ற நூல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டதையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.

அவருக்கு போர்த்தப்படாத பொன்னாடைகள் இல்லை. புன்னகை பூத்த முகத்துடன் அவர் பொன்னிற ஆடையும், சால்வையும் அணிந்து கண் முன் காட்சியளிப்பது மனதில் இன்றும் நிழலாடுகின்றது.

ஆரவாரமின்றி, இஸ்லாமிய ஈமானியப் பின்புலத்தில் பணி செய்து ஓய்ந்துள்ள நண்பர் மஜீத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அளிப்பானாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் அல்லாஹ் ஆறுதலை வழங்குவானாக.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment