நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் புதிய பிரேரணை குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பொறுப்பு கூறலை வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் புதிய பிரேரணை குறித்து அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தும்.

புதிய பிரேரணையில் எவ்வகையான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பதில் அதிக அவதானம் செலுத்தப்படும். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த பிரேரணைக்கும் இணக்கமாக செயற்பட மாட்டோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட 30/1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுக்கு அடிபணிய மாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 30/1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்குவதில் இருந்து விலகினோம். நாட்டின் சுயாதீனத் தன்மையினை கருத்திற் கொண்டே அரசாங்கம் எந்நிலையிலும் செயற்படும்.

இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் அனைத்தையும் ஏற்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களுக்கு அனுசரணை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவிவகார கொள்கை திருத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் பொதுத் தன்மையுடன் செயற்படும். எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட மாட்டாது.

நாட்டுக்கு எதிராக செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலகவும் தயார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment