கட்சி உறுப்பினர்களை புதன்கிழமை சிறிகொத்தாவில் சந்திக்கிறார் ரணில் : காரணம் இதுவா? - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

கட்சி உறுப்பினர்களை புதன்கிழமை சிறிகொத்தாவில் சந்திக்கிறார் ரணில் : காரணம் இதுவா?

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளார். 

மாகாண சபை தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. 

இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தணவிற்கு ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தணவிடம் தொலைபேசி அழைப்பில் முக்கிய சில விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 2021 ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்திற்கு சவால்மிக்கதொரு காலம் என்பதுடன் இலங்கைக்கும் முக்கியமானதாகும். ஆளும் கட்சி தொடர்பில் மக்கள் எதிர்பார்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை குறி வைத்து பல நகர்வுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் மற்றும் அமைப்புகள் என அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு மாகாண சபை தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் ஜனவரி 5 ஆம் திகதி பழைய தேர்தல் முறைமையிலேயே மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை ஆளும் கட்சி பாராளுமன்றில் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடாத்துவற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. எனவே தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சி மறுசீரமைப்பு பணிகளை விரைவு செய்து வலுவாக செயற்படுவதுடன் ஜனவரியிலிருந்து பல கட்டமாக அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தல் முக்கியமானதொன்றாகும்.

எதிர்வரும் புதன்கிழமை சிறிகொத்தாவில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அழைத்து இறுதி தீர்மானங்கள் பல எடுக்க வேண்டும். கட்சி பதவிகள் மற்றும் தேசியப்பட்டியல் விவகாரம் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment