கைதிகளின் உடல்களை பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம் - இரண்டு பரிந்துரைகளையும் வெளியிட்டது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

கைதிகளின் உடல்களை பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம் - இரண்டு பரிந்துரைகளையும் வெளியிட்டது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின்போது உயிரிழந்த கைதிகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின்போது உயிரிழந்த கைதிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்களா? இல்லையா? என பிரேத பரிசோதனை முடிவும்வரை தகனம் செய்ய வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டத்திற்கும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களுக்கும், அமைதியின்மைக்கும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறைச்சாலையில் கூட்ட நெரிசல், கொரோனா தொற்று பரவல் குறித்த பயம் மற்றும் அதற்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரம் ஆகிய மூன்று காரணங்களே என அதன் ஆணையாளர் ரமணி முத்தெடுவேகம தெரிவித்தார்.

அத்துடன், நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலைக்கு இரண்டு முறை சென்று விசாரணையை மேற்கொண்டு அதன் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலை உள்ளிட்ட சிறைகளில் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அறிக்கையின் முதல் பரிந்துரை.

இரண்டாவது பரிந்துரை, சிறைக் கைதிகளின் சுகாதாரம் மற்றும் சிகிச்சை குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் புதிய கைதிகளைச் சிறைச்சாலைக்கு அனுமதிக்கும்போது அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கைதிகள் மத்தியில் அச்சத்தைக் குறைக்க கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் தனி சிகிச்சை மற்றும் வசதிகளை வழங்குவது மற்றொரு திட்டமாகும்.

அத்துடன், உயிரிழந்த, காயமடைந்த மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கைதிகளின் குடும்பங்களுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குவதோடு, உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருந்து ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சர்வதேச நீதி ஆணையம், இந்த விவகாரத்தில் முழுமையான, சுயாதீனமான விசாரணையை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிக்குமாறும் மற்றும் சிறிய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் அது கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment