(எம்.எப்.எம்.பஸீர்)
மஹர சிறைக் களேபரத்தின் போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை குறித்த கொரோனா வர்த்தமானி பிரகாரம் தகனம் செய்வதன் ஊடாக, அது குற்றவியல் விசாரணைகளை பாதிக்கலாம் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு, வத்தளை நீதிவான் நீதிமன்றுக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவித்துள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா இதனை, வத்தளை நீதிவான் புத்திக ஸ்ரீ ராலகவுக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து தீர்மானம் ஒன்றினை எடுக்கும் பொருட்டு, குறித்த சடலங்கள் தொடர்பில் எடுக்கப்பட முடியுமான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய, நாளை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவரையும் சுகாதார அதிகாரி ஒருவரையும் மன்றுக்கு அழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாரு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
'இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கையானவை அல்ல. அனைத்தும் சந்தேகத்துக்கு இடமான மரணங்கள். அப்படி இருக்கையில், கொவிட்19 வர்த்தமானிக்கு அமைய சடலங்களை தகனம் செய்தால், அது மரணங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகளை பாதிக்கலாம்.
ஒருவேளை இந்த மரணங்கள் தொடர்பில், படுகொலைகள் தொடர்பிலான சாட்சியங்கள் கிடைக்குமாயின், கொவிட்19 சுற்றறிக்கை பிரகாரம் சடலங்களை தகனம் செய்தல் என்பது குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல உதவுவதாக அமையும்.
எனவே குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியா வண்ணம் பொருத்தமான உத்தரவொன்றினை வழங்கவும்.' என சட்டத்தரணி சேனக பெரேரா அந்த நகர்த்தல் பத்திரம் ஊடாக நீதிமன்றினை கோரியுள்ளார்.
இந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் நாளை வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆராயப்படவுள்ளது. அதன்படி, நாளைய தினம் சட்டமா அதிபர் திணைக்கள சட்டவாதிகள் எவரேனும் ஆஜராகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மஹர சிறைக் களேபரத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கலில் 9 பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை நேற்று மாலை உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சடலங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment