மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கூட துப்பாக்கி பிரயோகத்தில் மரணிக்கவில்லை - அமைச்சர் ரொஹான் ரத்வத்த - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கூட துப்பாக்கி பிரயோகத்தில் மரணிக்கவில்லை - அமைச்சர் ரொஹான் ரத்வத்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கூட துப்பாக்கி பிரயோகத்தில் மரணிக்கவில்லை. மாறாக கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற சண்டையிலேயே உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலை ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷா உரையாற்றும் போது, மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதனை நிராகரித்துவிட்டு, தற்போது கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில் மரணித்ததாக தெரிவிக்க முற்படுகின்றனர் என தெரிவித்தார். 

இதன்போது சபையில் இருந்த புதிதாக நியமிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, அதற்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நேற்று மஹர சிறைச்சாலைக்கு சென்று அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களையும் பார்வையிட்டேன். 

தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு செல்கின்றனர். இடம்பெற்ற சம்பவத்தில் 11 பேர் இறந்துள்ளனர். 

அவர்களில் யாரும் துப்பாக்கி பிரயோகத்தில் மரணிக்கவில்லை. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற சண்டையிலே மரணித்துள்ளனர் என்பது மரண விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. 

அத்துடன் அங்கு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் துப்பாக்கி பிரயோகத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment