யாழ். பல்கலைக்கழக வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு - இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

யாழ். பல்கலைக்கழக வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு - இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு நேற்று (28) யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில், முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கான இணையத்தளத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சம்பிரதாயபூர்வமாக இயக்கி ஆரம்பித்து வைத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ஆய்வு மாநாடு குறித்து வழங்கப்பட்ட விபரம் வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது 6வது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாட்டினை “நிலைபேறான அபிவிருத்திக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் : பொருளாதார மீண்மைக்கான தீர்வுகளுக்கு ஊக்கமளித்தல்” என்ற ஆய்வுக் கருப்பொருளில் நடாத்த தீர்மானித்திருக்கின்றது.

எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடிகளினைத் தவிர்த்து வாய்ப்புக்களையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிவர்த்தி செய்யக்கூடியவாறான நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்குவது தற்காலத்தில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழலினை ஒன்றிணைப்பதாகக் காணப்படுகின்றது. நாம் எல்லோரும் பல்வேறுபட்ட எதிர்பாராத சவால்களும் இடர்களும் மிகுந்த சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

குறிப்பாக Covid-19 பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பரந்த தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிது. இவ் இடர் பல மில்லியன் வேலை வாய்ப்புகளினை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது. 

அத்துடன் நாடுகளின் பொருளாதார மந்தம், வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்களின் முடக்க நிலை போன்றவற்றை தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு வித்திட்டு வருகின்றது.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார நலன் சார்ந்த மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறைகளினூடாக பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளினை பெற்றுக் கொடுப்பதோடு நிலைபேறான அபிவிருத்தியினை நோக்கிய செயற்பாடுகளிற்கு வழியமைக்க வேண்டியது அவசியமாகின்றது.

பொருளாதாரத்தினை மீள் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல், வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமை ஒழிப்புத்திட்டங்களை வலுப்படுத்தல், ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்குதல், மகிழ்ச்சியான நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழலினைப் பேணுதல் போன்ற கொள்கை நடைமுறைகள் நிகழ்காலத்தில் இன்றியமையாததாக காணப்படுகின்றன.

இவ் ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுத் தலைவராக முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி. ந. கெங்காதரன் செயற்படுகின்றார். இவ் ஆய்வு மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களினை https://iccm.maco.jfn.ac.lk இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment