பணக்கார நாடுகள் தங்கள் ஒட்டு மொத்த மக்களுக்கும் பலமுறை செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கிக் குவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகக் குழுவினர் கொரோனா தடுப்பு மருந்து வாங்குவதில் பணக்கார நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் உள்ள இடைவெளி குறித்த ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர்.
அதில் பணக்கார நாடுகள் தங்கள் ஒட்டு மொத்த மக்களுக்கும் பலமுறை செலுத்தத் தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்தை முன்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுவரை முந்நூறு கோடி முறை செலுத்தும் அளவுக்குத் தடுப்பு மருந்தைக் கொள்முதல் செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஏழை நாடுகளின் மக்களுக்குத் தடுப்பு மருந்து கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 14 வீதத்தை மாத்திரமே கொண்ட நாடுகள் தடுப்பு மருந்தில் பாதிக்கும் அதிகமானதை வாங்கி இருப்பதாக மக்கள் தடுப்பு மருந்து கூட்டணி என்ற அமைப்பு அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
இதனால் அபிவிருத்தி அடைந்துவரும் 70 நாடுகளின் வெறும் 10 வீதமானவர்களுக்கே அடுத்த ஆண்டில் தடுப்பு மருந்து கிடைக்கும் சாத்தியம் இருப்பதாக அது குறிப்பிட்டிருந்தது.
No comments:
Post a Comment