(இராஜதுரை ஹஷான்)
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த 2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் போலியான குற்றச்சாட்டுகளை குறிப்பிடுகிறார்கள் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற ரீதியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது பாரிய சவாலாகும், தேசிய உற்பத்திகளை மேம்படுத்த விவசாயத்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றப்படும்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். கடந்த அரசாங்கத்தை மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள். அரசியல் நோக்கங்களுக்காக குறிப்பிடப்படும் குற்றச் சாட்டுகளுக்கு மக்கள் அவதானம் செலுத்தமாட்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment