மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள கலவரத்தின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத சக்தியொன்று உள்ளது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள கலவரத்தின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத சக்தியொன்று உள்ளது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள கலவரத்தின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத சக்தியொன்று உள்ளதாகவும், சிறைச்சாலைக்குள் கலவரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் திட்டமிட்ட முயற்சியொன்றே இதுவென இராஜாங்க அமைச்சர் அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் மட்டுமல்லாது வெலிக்கடை சிறைச்சாலையிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சுயாதீன விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, கேள்வி நேரத்தின் போது மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் தெரிவித்த வேளையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். இங்கு மட்டும் அல்ல நாட்டில் சகல சிறைச்சாலைகளிலும் கடந்த மூன்று வார காலமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. சிறைச்சாலை கலவர அலையாக இது மாற்றம் பெற்றுள்ளது.

போதைப் பொருள் கடத்தல், பாவனையாளர்கள் இன்று சிறைச்சாலைக்குள் அதிகமாகவே உள்ளனர். எனினும் கடந்த காலங்களை போல் அல்லாது நாம் சிறைச்சாலை பாதுகாப்பை பலப்படுத்தி கொவிட்-19 காரணிகளை கருத்தில் கொண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்தோம். எனினும் தற்போது சிறைச்சாலைகளில் அதிகளவில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரையில் 1099 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ உதவிகளை முன்னெடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு சிலர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளனர். ஏனையவர்களை சிறைச்சாலைகுள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இன்று சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் போதைப் பொருள் வியாபாரிகள், அல்லது கடத்தல் காரர்களாக உள்ளனர். இவர்களில் நேரடியான குற்றத்தில் ஈடுபடாத அல்லது சாதாரண குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. 

எவ்வாறு இருப்பினும் நேற்று மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் கைதிகள் சிலர் தப்பித்து செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களின் தப்பித்தல் முயற்சியின் காரணமாகவே இவ்வாறான கலவரம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனை தடுக்க பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் சிலர் உயிரிழந்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் அதிகளவான அரச வளங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது. தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போது நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இந்த கலவரத்தின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத சக்தியொன்று உள்ளதென நாம் நம்புகிறோம். எனவே இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிக்க நாம் தயார். 

யார் இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ளனர், யார் இதனை இயக்குகின்றனர் என்பது கண்டறிய வேண்டும். அரசாங்கமாக நாம் அதற்கான நடவடிக்கை எடுப்போம். இதனை விசாரிக்க இரகசிய பொலிசாருக்கும் அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment