பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் நாளை (23) முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை COVID-19 வைரஸ் தொற்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.
குறித்த காரணத்தினால், தற்போதுவரை இந்தியா உள்ளிட்ட சுமார் 40 நாடுகளால், பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, நாளை அதிகாலை 2.00 மணி முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வரும் எந்தவொரு விமானமும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கொவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போது கொவிட் புதிய வைரஸ் மற்றும் அதன் பரவலை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) குறித்த முடிவை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இங்கிலாந்திலிருந்து இன்று (22) இலங்கை வரவுள்ள பயணிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டு சுகாதாரத் துறையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலண்டனில் இருந்து வரும் சரக்கு விமானங்களின் பணிக் குழுவினரும் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுவர்.
இன்றைய கலந்துரையாடலின் போது, கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கொவிட் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரிகள் மற்றும் கொவிட் குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
No comments:
Post a Comment