(எம்.மனோசித்ரா)
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கான எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை நாளை (23) முதல் 11 பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு நாளை முதல் ஜனவரி 5 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடப்பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதுவரையில் 4 பகுதிகளில் மாத்திரமே இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் நாளை முதல் 11 இடங்களில் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதற்கும் மேலதிகமாக அதிவேக வீதிகளிலும் அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
தொற்றுக்குள்ளானவரை இனங்காணல் மற்றும் அவ்வாறானவர்கள் மூலம் ஏனைய பகுதிகளில் உப கொத்தணிகள் உருவாகுவதை தடுத்தல் என்பவற்றையே இதன் மூலம் எதிர்பார்க்கின்றோம்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகள் உருவாகி தற்போது அவற்றின் இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதிலும், மத்திய மலைநாடு போன்ற பகுதிகளில் பல உப கொத்தணிகள் உருவாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையின் போது பெருமளவானோர் அந்த பகுதிகளுக்கு சென்றமையே இதற்கான காரணமாகும். எனவே தற்போது பண்டிகைக் காலத்தில் மீண்டும் இவ்வாறு உப கொத்தணிகள் உருவாகாமல் தடுப்பது எமது இலக்காகும்.
கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோர் தொடர்பில் மேற்கொண்ட Rapid Antigen உடனடி சோதனையின் அடிப்படையில், 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஒவ்வொருவரிடமிருந்து கிளை கொத்தணிகள் உருவாகாமல் இருப்பதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
இதுவரையில் கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று ஏனைய மாவட்டங்களிலும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், தொடர்மாடி குடியிருப்புக்கள் , வீதிகள் என பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை முதல் (இன்று முதல்) ஜனவரி 5 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதன்போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுபவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.
No comments:
Post a Comment