சிறைக் கைதிகளில் 52 சத வீதமானோர் போதைக்கு அடிமையானவர்கள் - 28,541 சிறைக் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர் -அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

சிறைக் கைதிகளில் 52 சத வீதமானோர் போதைக்கு அடிமையானவர்கள் - 28,541 சிறைக் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர் -அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி

சிறைக் கைதிகளில் 52 வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இவர்கள் சமுகமயப்படுத்தப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறான கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்காக நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவை என்று தெரிவித்த அமைச்சர், இவ்வாறான கைதிகளை சிறையில் அடைப்பது தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டினார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காகவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்காகவும் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த குழு நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையை அவதானிப்பதற்கு சென்றிருந்ததாகவும் கூறினார்.

அத்துடன் விசாரணைக் குழுவின் அறிக்கைக்கமைவாக எதிர்காலத்தில் மஹர சிறைச்சாலையில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நடக்காதிருக்க விசேட திட்டம் முன்னெடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கைதிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறிய அவர், சிறைச்சாலைகளிலுள்ள நெரிசலை குறைக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

2020.11.29ஆம் திகதியளவில் நாட்டின் சிறைச்சாலைகளில் 28,541 சிறைக் கைதிகள் இருந்தனர். இவர்களுள் 20,723 பேர் விளக்கமறியல் கைதிகள். 7818 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்றும் அமைச்சர் கூறினார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மஹர சிறைச்சாலையில் 2891 கைதிகள் இருந்துள்ளனர். இவர்களுள் 2559 பேர் விளக்கமறியல் கைதிகளாவர், 732 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள். அங்கு இடம்பெற்ற சம்பவத்தினால் 2020.12.02 ஆம் திகதி வரையில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 106 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 38 பேர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையிலும், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் 24 பேர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

53 கைதிகள் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காயங்களுக்கு உள்ளான இரண்டு அதிகாரிகளும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைச்சாலை திணைக்களம் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. இவற்றின் மூலம் கைதிகள் மத்தியில் மோதல்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கைதிகளின் உயிர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் 11,500 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,. இதற்கு மேலதிகமாக இவர்களுக்கு ரபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

போதைப் பொருளுக்கு அடிமையான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான மத்திய நிலையம் ஒன்று எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment