நத்தார் ஆராதனைகளில் 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும், சுகாதார பிரிவுக்கு ஒத்துழையுங்கள் - அருட்தந்தை ஜெபரட்ணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

நத்தார் ஆராதனைகளில் 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும், சுகாதார பிரிவுக்கு ஒத்துழையுங்கள் - அருட்தந்தை ஜெபரட்ணம்

நத்தார் ஆராதனைகளில் அதிகபட்சமாக 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும், சுகாதார பிரிவுக்கு ஒத்துழையுங்கள் என யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நத்தார் விசேட திருப்பலிகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிறிஸ்தவ தேவாலய திருப்பலிகள் பற்றியும் குறிப்பாக நத்தார் தின விசேட திருப்பலிகள் பற்றி சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தோம். தற்பொழுது ஒரு முக்கியமான அறிவித்தலை வழங்க விரும்புகின்றேன். 

அதாவது தேவாலயங்களில் நடைபெறுகின்ற திருப்பலிகளில் அதிகபட்சமாக 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என கண்டிப்பாக சுகாதாரப் பிரிவினரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சுகாதார அதிகாரிகளினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நடைமுறையினை இறுக்கமாக கடைப்பிடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். ஆகவே தேவாலயங்களில் இடம்பெறும் பூஜைகளின்போது 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதனால், பலர் திருப்பலிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படும். இதனால், நீங்கள் யாரிடமும் மனத்தாங்கல் கொள்ளாமல் உலகத்தினுடைய நன்மைக்காக நீங்கள் செய்கின்ற ஒரு தியாகமாக இதனை கருதி இந்த திருப்பலி நிகழ்வுகளில் குறிப்பாக நத்தார் மற்றும் புதுவருட திருப்பலிகளை வீடுகளில் இருந்து நேரடியாக இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகுவதை நேரடியான திருப்பலிகளை கண்டுகளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு இந்த நடைமுறை தொடர்பில் ஒவ்வொரு பங்குச் தந்தையர்களுக்கும் விரிவாக குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறித்த விடயம் தொடர்பில் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த ஏற்பாடானது, உங்களையும் மற்றும் உலக மக்களையும் கொடிய நோயில் இருந்து பாதுகாக்கும் சமூகதொற்று ஏற்படாது இருப்பதற்கும் இது பெரும் ஒத்துழைப்பாக அமையும். எனவே உங்களுடைய நன்மைக்காகவும் எல்லா மக்களுடைய நன்மைக்காகவும் உங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு திருப்பலி அல்லாத வேளைகளிலே பகல் வேளைகளில் நீங்கள் வழமைபோன்று ஆலயத்திற்குச் சென்று பாலகன் இயேசுவினுடைய ஆசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நத்தார் தினத்தன்று 24ஆம் திகதி நள்ளிரவு 11 .30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடாத்தப்பட இருக்கின்றது. திருப்பலி நிகழ்வுகள் யாவும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment