மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 49 பேருக்கு கொரோனா - சிகிச்சையளித்தல், பரவாது தடுத்தல் என்பதே நோக்கம் - ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 49 பேருக்கு கொரோனா - சிகிச்சையளித்தல், பரவாது தடுத்தல் என்பதே நோக்கம் - ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக மேற்கொண்டு வரும் Rapid Antigen சோதனையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18 முதல் இவ்வாறு மேற்கொண்ட சோதனையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை இவ்வாறு மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய சுமார் 8,000 பேருக்கு ரெபிட் அன்ரிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதில் இதுவரை 49 பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், 11 இடங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளின் வெளியேறும் பகுதிகளில் இவ்வாறு தொடர்ச்சியாக இச்சோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நோய்க்கு உரிய முறையில் சிகிச்சை வழங்குதல், ஏனையோருக்கு அது பரவாது தடுத்தல், தாங்கள் செல்லும் இடத்திற்கு அது பரவாதிருத்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவ்வாறான சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அஜித் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment