சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 23 தொழிலாளர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 23 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 23 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலகிலேயே அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. இதனால் அந்த நாடு முழுவதும் எண்ணற்ற நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன.

பல சுரங்கங்கள் உரிய அனுமதி இல்லாமலும் முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன. இதனால் சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன.

இதில் ஆண்டுதோறும் 100 க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். ஆனாலும் சீன அரசு இதில் முறையாக கவனம் செலுத்தாததால் சுரங்க விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த நிலையில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் யோங்சுவான் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. 

இங்கு நேற்று முன்தினம் (4) மாலை வழக்கம்போல் பணிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. 23 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் கார்பன் மோனாக்சைட் வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியது. தொழிலாளர்கள் அதனை சுவாசித்ததால் அவர்களுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

சில வினாடிகளில் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழுந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் சென்று சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கி 18 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

அதே சமயம் 5 தொழிலாளர்கள் மயங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

சுரங்கத்துக்குள் விஷவாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் சீனாவின் குய்சோ மாகாணம் கிஜியாங் மாவட்டத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment