21 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்கியது போயிங் 737 மேக்ஸ் விமானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

21 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்கியது போயிங் 737 மேக்ஸ் விமானம்

அமெரிக்காவில் 21 மாத இடைவெளிக்குப் பின்னர் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் 10ம் திகதி மற்றொரு விபத்தை சந்தித்தது. அந்த விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு மிகப்பெரிய விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. இதனால் போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது.

கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி இந்த விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.

அமெரிக்க விமானப் போக்குவரத்து வரலாற்றில் அதிக அளவிலான விமானங்களின் தரையிறக்கம் இதுவே முதல்முறை ஆகும். அதன் பின்னர் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, ஆய்வுகள் திருப்திகரமாக இருந்ததால் போயிங் 737 மேக்ஸ்  ரக விமானங்களை வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு மத்திய விமான போக்கு வரத்து நிர்வாகம் கடந்த மாதம் 18ம் திகதி அனுமதி சான்றிதழ் வழங்கியது.

விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட விமான கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த அனுமதி சான்றிதழ் வழங்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் தெரிவித்தன. 

இதையடுத்து, 20 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 10ம் திகதி முதல் முறையாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கியது. போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் முதல் பயணம் பிரேசில் நாட்டில் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் 21 மாத இடைவெளிக்குப் பிறகு போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன.

மியாமி மற்றும் நியூயோர்க்கில் உள்ள லாகவுர்டியா நகரங்களுக்கு இடையே போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இன்று (30) தனது முதல் பயணத்தை தொடங்கியது.

No comments:

Post a Comment