கொரோனாவால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் உடலை தகனம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இன்று (12) பொரளை கனத்தை மயானத்தில் வெள்ளை துணிகள் கட்டப்பட்டன.
முஸ்லிம் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் செயற்பாட்டாளர்கள் வெள்ளை துணிகளை கட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வைத்தியர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததும் பின்னர் அந்த குழந்தை உயிரிழந்ததும் முஸ்லிம் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதும் கடும் உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பினை வெளியிடுகிறேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மொலானா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எரிக்கப்பட்ட வெறும் 20 நாட்களே ஆன பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரிற்காகவும் பல உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட பொரல்லை மயானக் கதவிலே ஒரு வெள்ளை துணியினை கட்டுகிறேன். ஒரு தேசத்தின் கனத்த அவமான சின்னமாக மயான கதவினில் அது தொங்கட்டும் என தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மொலானாவால் வெள்ளை துணி கட்டப்பட்டது.
No comments:
Post a Comment