1,500 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மீட்பு - நான்கு சந்தேகநபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

1,500 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மீட்பு - நான்கு சந்தேகநபர்கள் கைது

மாரவில, தொடுவாவ பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப் பொருட்களின் பெறுமதி, ரூபா 1,500 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆரியதாச போதகொடவின் நேரடி மேற்பார்வையில், கலால் திணைக்கள புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, திணைக்கள ஊடப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

குறித்த போதைப் பொருள் கடத்தல் துபாயில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தற்போது தெரியவந்துள்ளதுடன், பூம் ட்ரக் ஒன்றில் காணப்படும் ஒரு மின்பிறப்பாக்கியில் சூட்சுமமாக மறைத்து வைத்து குறித்த போதைப் பொருட்களை கொண்டு செல்லும்போது சந்தேகநபர்கள் இன்று (6) கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப் பொருட்கள் பெட்டிகளிலும் பைக்கற்றுகளிலும் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த போதைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பூம் ட்ரக்கின் பாதுகாப்பிற்கு மேலும் இரண்டு வாகனங்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இச்சுற்றிவளைப்பில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இரண்டு வேன்கள் மற்றும் லொறி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலால் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுபோன்ற பாரிய அளவிலான போதைப் பொருள் எவ்வாறு நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது, இவ்வலையமைப்பு யார் ஊடாக இயங்குகிறது என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் கலால் திணைக்கள அதிகாரிகளுடன் இலங்கை கடற்படையினரும் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment